கோலாலம்பூர், நவ 16- தொழிலாளர்களின் சம்பளம் முறையாக வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
ஊழியர்கள் விரும்பினால் அல்லது மனிதவளத் துறை தலைமை இயக்குநரின் ஒப்பதல் கிடைக்கும் படசத்தில் மட்டுமே சம்பளத்தை முதலாளிகள் ரொக்கமாக வழங்கலாம் என அவர் தெரிவித்தார்.
வங்கியின் மூலம் சம்பளம் வழங்காதது 1955ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் 25 மற்றும் 25ஏ பிரிவின் கீழ் குற்றம் எனக்கூறிய அவர், இத்தகைய குற்றங்களைப் புரியும் முதலாளிகளுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
நேற்று பாசார் போரோங் காய்கறிகள் சந்தைக்கு வருகை புரிந்தபோது பெரும்பாலான முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளத்தை ரொக்கமாக வழங்குகிறார்கள் என்பது தெரிய வருகிறது என்றார்.
தொழிலாளர்களின் சம்பளத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதை பாசார் போரோங் முதலாளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் போடப்படுகிறது என்பதை உறுதி செய்ய இது வழி வகுக்கிறது என்றார் அவர்.
ஆகவே அனைத்து முதலாளிகளும் தங்களது தொழிலாளர்கள் சம்பளத்தை வங்கியில் செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
செலாயாங் பசார் போரோங்கிற்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து நேரில் தெரிந்து கொண்டார்.


