ஷா ஆலம், நவ 16- கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் மாநிலத்தில் கல்வி சார்ந்த தேவைகளை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களை தயார் படுத்துவதற்கும் ஏதுவாக வரும் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு கிட்டத்தட்ட 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் எதிர்கால நலனுக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய நிபுணத்துவத்தை தயார் செய்வதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இந்த நிதி ஒதுக்கீடு புலப்படுத்துவதாக ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் அஸ்மி கூறினார்.
கல்வி சார்ந்த பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான பாயு எனப்படும் பல்கலைக்கழக அடிப்படை கல்விக் கட்டணம் உதவித் திட்டமும் அடங்கும். இது தவிர, உயர்கல்விக் கூட மாணவர்களுக்கான வெகுமதித் திட்டத்திற்கு 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிற மாநிலங்களை விட அதிக நிதி வழங்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
மேலும் 90 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கிட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில உபகாரச் சம்பள நிதி திட்டத்தின் கீழ் பெடுலி சிஸ்வா, சிறப்புத் திட்டம் மற்றும் மாற்றக்கூடிய கடனுதவி ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன என்றார் அவர்.
நேற்று மாநில சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமூக நல முன்னெடுப்பின் கீழ் 35 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அபாஸ், வாழ்க்கைச் சுமையை எதிர்நோக்கியுள்ள தரப்பினருக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட கொள்கைகளை மாநில அரசு வகுத்துள்ளதை இது காட்டுகிறது என்றார்.


