ஷா ஆலம், நவ. 14 - சிலாங்கூர் செயற்கை நுண்ணறிவு மையத்தை (ஏ.ஐ.) அமைக்க முன்மொழியப்பட்டிருப்பது வளர்ந்து வரும் அந்த புதிய தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான சரியான நடவடிக்கையாக அமையும் எனக் கருதப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிக திறமையாளர்களை உருவாக்கும் சிலாங்கூர் இலக்கவியல் பள்ளியின் (எஸ்.டி.எஸ்.) நோக்கத்திற்கேற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (சீடேக்) தலைமைச் செயல் முறை அதிகாரி யோங் காய் பிங் கூறினார்.
600 மாணவர்களுக்கு ஏ.ஐ. குறித்து பயிற்சி அளிப்பதற்காக சீடேக் நிறுவனத்தால் எஸ்.டி.எஸ். நிறுவப்பட்டது. இந்த துறையில் அதிக திறன் பெற்றவர்களை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மூலம் அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திட்டத்தில் ஏ.ஐ. இன்ஜினியரிங் படிக்கும் குறைந்தது 30 மாணவர்களுடன் எங்கள் முதல் வகுப்பு ஏற்கனவே இந்த மாதம் தொடங்கிவிட்டது என்று அவர் சிலாங்கூர்கினியிடம்
தெரிவித்தார்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஏ.ஐ. நிபுணர்களுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் சீடேக் மூலம் மாநில அரசு உருவாக்கியத் திட்டமே இந்த எஸ்.டி.எஸ். ஆகும்.
தொழில்துறையில் உள்ள விரிவான வாய்ப்புகளை மாநிலம் கைப்பற்றுவதை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவுக்கான சிலாங்கூர் மையத்தை நிறுவும் திட்டத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வெள்ளிக்கிழமை 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமப்பித்தபோது அறிவித்தார். அடுத்த ஆண்டு இதற்காக மாநில அரசால் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படும் என்றார்.


