ஷா ஆலம், நவ 14 - மாநில அரசினால் கடந்தாண்டு அக்டேபார் மாதம்
அறிமுகப்படுத்தப்பட் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் (இன்சான்)
கீழ் இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மாநிலத்திலுள்ள 60 லட்சம்
பேர் இலவச காப்புறுதி பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.
பிறந்து முப்பது நாள் ஆன குழந்தை முதல் 80 வயது வரையிலான
முதியவர்கள் வரை இந்த இலவச காப்புறுதி திட்டத்தில் பயன் பெற
முடியும். விபத்தின் காரணமாக உயிரிழப்பு அல்லது நிரந்தர
முடத்தன்மைக்கு ஆளானவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு
வழங்கப்படுகிறது.
இந்த இன்சான் காப்புறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை
இன்சான் மரபுரீதியான காப்புறுதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 1 கோடியே
20 லட்சம் வெள்ளி நிதியில் 680,000 வெள்ளி 62 பேரின் வாரிசுகளுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் இந்த காப்புறுதி இழப்பீட்டிற்கு 129
விண்ணப்பங்களைத் தாங்கள் பெற்றதாக மந்திரி பெசார் கழகத்தின்
(எம்.பி.ஐ.) தலைமை செயல்முறை அதிகாரி சைபோல்யாசான் எம். யூசுப்
கூறினார்.
இந்த விண்ணப்பங்களில் பல தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களில் வாகனமோட்டும் லைசென்ஸ், சாலை வரி
போன்றயை இணைக்கப்படாததால் இந்த விண்ணப்பங்கள் மீது கூடுதல்
கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
உயிரிழந்த பாலிஸிதார்ர்களின் வாரிசுகளிடம் நல்லடக்கச் சடங்கிற்கான
1,000 வெள்ளி தொகையுடன் சேர்த்து மொத்தம் 11,000 வெள்ளிக்கான
காப்புறுதி இழப்பீட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அல்லது எம்.பி.ஐ. பிரதிநிதி நேரடியாக வழங்கினார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில்
பலியான சிலாங்கூரில் வசிக்கும் மற்றும் சிலாங்கூர் வாக்காளர்களாக
உள்ளவர்களின் வாரிசுகளுக்கு இந்த காப்புறுதித் தொகை
ஒப்படைக்கப்பட்டது.


