ஷா ஆலம், நவ 11- அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் போது பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவளித்ததன் மூலம் சிலாங்கூர் வாக்காளர்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவர்களின் இந்த முடிவு மாநிலத்தில் நிலைத்தன்மையும் அமைதியும் நிலவுவதற்கு வழி வகுத்தது என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களின் நலனுக்காக பாடுபடுவதிலும் மக்களுக்கு ஆக்கத்திறன் அளிப்பதிலும் சிலாங்கூர் அரசின் சாதனைகளை பெரும்பாலான மக்கள் அங்கீகரித்துள்ளதை கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.
கடந்த முறை மாநில அரசு மேற்கொண்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த அமோக ஆதரவை அவர் சுட்டிக் காட்டினார்.
சிலாங்கூர் அரசின் ரோடா டாருள் ஏஹ்சான், மக்கள் நல்வாழ்வு உதவித் திட்டம் (பிங்காஸ்), அனாக் இஸ்திமோ சிலாங்கூர் (அனிஸ்) எனும் சிலாங்கூர் பிரத்தியேக சிறார் உதவித் திட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகளை பெரும்பாலான மக்கள் பெரிதும் பாராட்டியதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.
கடந்த மாநிலத் தேர்தலின் போது சிலாங்கூர் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை காப்பது, வசதி குறைந்தவர்களின் உரிமைகளைக் காப்பது மற்றும் ஐ.எஸ்.பி. திட்டத்தை அமல்படுத்தியது போன்ற சிறப்பான சாதனைகளுக்கான கடந்த கால வரலாற்றை மாநில அரசு கொண்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து அமைதியுடனும் பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்ய மாநில மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர் என நாம் நம்புகிறேன் என்றார் அவர்.


