காஸா நகர், நவ 8 - மனிதாபிமான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகன
அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச்
சங்கம் கூறியது.
மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு
அனைத்துலக மனிதாபிமானம் தொடர்பான சட்டங்களை அனைத்து
தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று அச்சங்கம் வலியுறுத்தியது.
அல்-குட்ஸ் மருத்துவமனை மற்றும் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம்
உள்ளிட்ட சுகாதார மையங்களுக்கு மருத்துவப் பொருள்களை ஏற்றிக்
கொண்டு ஐந்து டிரக்குகள் மற்றும் இரு வாகனங்கள் அடங்கிய அந்த
வாகன அணி சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல்
நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இரு டிரக்குகள் சேதமடைந்த வேளையில் ஓட்டுநர்
ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு காஸாவில்
பாதுகாப்பான சூழல் இல்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது
என்று காஸாவிலுள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க தலைமைப்
பிரதிநிதி வில்லியம் ஸ்கம்பெர்க் கூறினார்.
மக்களுக்கு உதவிப் பொருள்களை உடனடியாக சேர்ப்பிப்பதற்காக நாங்கள்
இங்கு வந்தோம். அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் கீழ்
மருத்துவ உதவிகள் உடனடியாக சேர்க்கப்பட வேண்டும் என்பது
கட்டாயமாகும் என்றார் அவர்.


