ஜெருசலம், நவ 8- காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களைத்
தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் குண்டு வீச்சினால் தகர்க்கப்பட்டது
மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள
மருத்துவமனைகளும் சுகாதார பராமரிப்பு மையங்களும் தங்கள்
நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டிய
கட்டாயத்திற்குள்ளாகியுள்ளன.
கடந்த மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
தாக்குதல்களைத் தொடக்கியது முதல் மருத்துவமனைகள் மற்றும்
சுகாதார பராமரிப்பு மையங்கள் மீது குறைந்தது 102 தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தை மேற்கோள் காட்டி
அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் 504 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 459 பேர்
காயமடைந்துள்ளனர். இது தவிர, 31 சுகாதாரம் தொடர்புடைய கட்டிடங்கள்
நிர்மூலமாக்கப்பட்டதோடு 31 ஆம்புலன்ஸ் வண்டிகளும்
சேதமடைந்துள்ளன என்று அது கூறியது.
பொது மக்களும் சுகாதார பாதுகாப்பு மையங்களும் பாதுகாக்கப்பட
வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
காஸாவில் 18 மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும்
எனினும், மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவை
தொடர்ந்து செயல்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்
காஸாவிலுள்ள ஊடக மையம் தெரிவித்தது.
இஸ்ரேலிய இராணுவம் கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் காஸா மீது
வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை இடைவிடாது மேற்கொண்டு
வருகிறது.
இந்த தாக்குதல்களில் இதுவரை 4,104 சிறார்கள், 2,641 பெண்கள் உள்பட
10,022 பேர் உயிரிழந்துள்ளனர்.


