அங்காரா, அக்.27 - காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்பது அரபு நாடுகள் வியாழக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தை வலியுறுத்தின.
எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, கட்டார், குவைத், பஹ்ரின், ஓமன் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை குறிவைத்தல், கட்டாய இடப்பெயர்வு மற்றும் கூட்டு தண்டனைக் கொள்கை ஆகிய நடவடிக்கைகளைத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாக அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடி மற்றும் நிலையான போர்நிறுத்தத்திற்கு சம்பந்தப்பட்டத் தரப்பினரை கட்டாயப்படுத்த வேண்டும். மேலும், மனிதாபிமான கோட்பாட்டிற்கு இணங்க தடைகள் இல்லாமல் பாதுகாப்பான முறையில் காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சென்று சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஸாவில் போர்நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுக்கும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவினால் வரையப்பட்ட இரண்டு தீர்மானங்களை பாதுகாப்பு மன்றத்தினால் நிறைவேற்ற முடியவில்லை.
முன்னதாக, ரஷ்யா மற்றும் பிரேசில் தாக்கல் செய்த தீர்மானங்களும் சபையின் நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் காரணமாக நிராகரிக்கப்பட்டன.


