ரமல்லா, அக் 25- எரிபொருள் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும்
காஸா மருத்துவமனைக்கு உடனடியாக உதவும்படி அனைத்துலக
சமூகத்தை “ஆக் ஷன் ஏய்ட் பாலஸ்தீன்“ எனும் மனித உரிமை அமைப்பு
கேட்டுக் கொண்டுள்ளது.
எரிபொருள் தீர்ந்து விடும் அபாயத்தில் மருத்துவமனை உள்ளதால்
குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட நோயாளிகளின் உயிருக்கு
பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.
குறைந்தது 120 குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 70 பேருக்கு மெக்கனிக்கல் வெண்டிலேட்டர் சாதனம்
பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் முற்றாகத் தீர்ந்து விடும் பட்சத்தில்
அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் உள்ளது. இத்தகைய
அதிமுக்கிய சாதனங்களின் உதவி இல்லாவிடில் அக்குழந்தைகள்
உயிரிழக்கும் அபாயம் உள்ளது என பாலஸ்தீன செய்தி நிறுவனமான
வாஃபா தெரிவித்தது.
காஸா மருத்துவமனை 38 சிறார்கள் உள்பட 1,100 சிறுநீரக
நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 13,000
தடவை டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பு
மேற்கொள்ளப்படுகிறது.
ஐயாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சைளிக்கும் வசதி கொண்ட காஸா
தீபகற்பத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபா மருத்துவமனையில்
தற்போது 700 நோயாளிகள் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குடியிருப்புகளை இழந்த சுமார் 45,000 பேரின் புகலிடாகவும் இந்த
மருத்துவமனை தற்போது விளங்கி வருகிறது.
காஸாவிலுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உடனடி
உதவி தேவைப்படுகிறது. காஸாவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், அரசுகள் மற்றம் பொது அமைப்புகளின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


