.ஷா ஆலம் அக்- 24- உணவின்றி பல நாட்கள் தவித்ததாக 28 வயதான பி முக்னிசுவாரி என்ற 5 குழந்தைகளின் தாய் பத்திரிகைக்கு அளித்த பேட்டியை தொடர்ந்து டுன் கோத்தா டாமன்சார தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஷ்வான் காசிம் , மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு மற்றும் அத்தொகுதியின் இந்திய சமூக தலைவர் திருமதி தேவி, மற்றும் நகராட்சி உறுப்பினர் காந்தி மற்றும் சுற்று வட்டார தலைவர்களும் சுபாங் தாமான் செகார் தம்பாஹான் மார்சிங் என்ற இடத்திலுள்ள பாதிக்கப் பட்டவரின் வீட்டிற்கு உணவு பொருட்களுடன் வருகை புரிந்தனர்.
இது குறித்து திருமதி தேவி கூறும் பொழுது, இன்றைய நிலையில் உணவு பிரச்சனை தீர்க்கப் பட்டுள்ளதாகவும், இந்த செய்தி அறிந்து வெளியிலிருந்தும் உணவு உதவிகள் வந்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
அந்த குடும்பம் எதிர்நோக்கும் இதர பிரச்சனைகள் , பிறப்பு பத்திரம் அற்ற பிள்ளைகள் அதனால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை, மற்றும் அவல நிலையில் உள்ள வீடு என்றார்.
பிள்ளைகள் பிறப்பு பத்திரம் பிரச்சனைக்கு தீர்வு காண மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தன்னை பணித்துள்ளதாகவும் தேவி குறிப்பிட்டார்.
வீட்டை சீரமைக்கும் பொறுப்பை அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக் கொண்டதாகவும், பிள்ளைகள் பிறப்பு பத்திர விவகாரத்திற்கு செலுத்த வேண்டிய அபராதத்திற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரை தான் நாட உள்ளதாகவும் திருமதி தேவி கூறினார்.
இந்த குடும்பத்துக்கு நீண்ட காலமாக பல மாதிரியான உதவிகளை தான் வழங்கி வந்ததாகவும், 5 பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் என்பதால் அவர்களின் தேவைகள் அதிகம் என்றும் தன்னால் இயன்ற அளவு உதவி உள்ளதாக கூறினார்.
முன்பு அந்த குடும்பத்திற்கான உதவியை தான் ஏற்பாடு செய்த பொழுது , திருமதி முக்னேஸ்வரிக்கும் அவர் கணவருக்கும் அடையாள பத்திரம் இல்லாதது ஒரு தடையாக அமைந்ததாகவும் , ஆனால் இப்பொழுது அவர்கள் அடையாள பத்திரத்தை பெற்று விட்டதால், பிங்கஸ் என்னும் ஏழைத் தாய்மார்களுக்கான உதவித்திட்டத்தில் அவரை சேர்த்துவிட இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்களித்துள்ளதாக கூறினார்.
தான் சமூக நலத் துறை இடமிருந்தும் உதவி பெற்றுத்தர முயற்சிப்பதாகவும். அதேவேளையில் இந்த செய்தி அறிந்து பல வகைகளில் உதவி வரும் சுற்றுவட்டார மக்களுக்கும் உணவு உதவிகளை வழங்கியவர்களுக்கும் தேவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்


