ரியாட், அக் 23- அனைத்துலக அமைதி, நிலைத்தன்மை மற்றும்
பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக ஒத்துழைப்பை
ஒருங்கிணைப்பது மற்றும் வலுப்படுத்துவதில் தங்களுக்குள்ள கடப்பாட்டை
மலேசியாவும் சவூதி அரேபியாவும் நேற்று மறுவுறுதிப்படுத்தின.
சவூதி அரேபியாவுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த
சனிக்கிழமை மேற்கொண்ட வருகையையொட்டி வெளியிடப்பட்ட
கூட்டறிக்கையில் இந்த உறுதிப்பாட்டை இருநாடுகளும்
வெளிப்படுத்தியுள்ளன.
சவூதி அரேபியா நேற்று வெளியிட்ட இந்த கூட்டறிக்கையை பெர்னாமா
செய்தி நிறுவனம் இன்று பிரசுரித்தது. பிரதமர் அன்வார் மற்றும் சவூதி
அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் ஆக்ககரமான பலன்களை அந்த
அறிக்கை எடுத்துரைத்தது.
பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவும்
பல்வேறு ரூபங்களிலான குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதில்
ஒருங்கிணைந்து செயல்படவும் அச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.
அவ்விரு சகோதரத்துவ நாடுகள் மத்தியில் பாதுகாப்பு மற்றும்
நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியாக இது
விளங்குகிறது என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
காஸாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு
அனைத்துலக நாடுகள் நெருக்குதலைத் தர வேண்டும் என இரு நாடுகளும்
வலியுறுத்தின.


