கோலாலம்பூர், அக் 23- இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிக்கித்
தவிக்கும் பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க
இந்தியா முன்வந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட அப்பகுதிக்கு
நிவாரணப் பொருள்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டதாக அந்நாட்டின்
வெளியறவு அமைச்சு நேற்று கூறியது.
நிவாரணரப் பொருள்களை ஏற்றிய இந்திய ஆகாயப் படையின் சி17 ரக
விமானம் ஹிண்டோன் ஆகாயப்படைத் தளத்திலிருந்து எகிப்தின் எல்-
அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டதாக அது தெரிவித்தது.
அந்த பொருள்களில் முக்கியமாக, மருந்துகள் மற்றும் உபகரணங்கள்,
உடனடி சிகிச்சைக்கு தேவையான குறிப்பாக காயங்களுக்கு சிகிச்சை
தரக்கூடிய மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும்
நிவாரணப் பொருள்களும் அடங்கும் என வெளியுறவு அமைச்சு
வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
இவை தவிர, சுமார் 32 டன் எடையிலான தற்காலிகக் கூடாரங்கள்,
உறங்குவதற்குப் பயன்படும் பைகள், கென்வெஸ், நீர் சுத்திகரிப்பு
மாத்திரைகள், சானிட்டரி பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன என்று
மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் பெறப்பட்ட அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலஸ்தீன பிரதமர் மாமுட் அபாஸை கடந்த 19ஆம் தேதி
தொடர்பு கொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து தனது ஆழ்ந்த
அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
அந்த வட்டாரத்தில் காணப்படும் பயங்கரவாதம், வன்செயல் மற்றும்
பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய மோடி, இந்தியாவுடன் பாரம்பரிய உறவைக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் வாக்குறுதியளித்தார்.
இந்தியாவின் ஆதரவுக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொண்ட மாமுட், அந்நாட்டின் நிலைப்பாட்டிற்கு தனது நன்றியையும் புலப்படுத்தினார்.


