ரமல்லா, அக் 22- இம்மாதம் 7ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் காஸாவில் 1,661 சிறார்களைப் படுகொலை செய்துள்ளதாக பாலஸ்தீன-அனைத்துலக சிறார் பாதுகாப்பு அமைப்பு (டி.சி.ஐ.பி.) கூறியது.
இது தவிர மேற்கு கரையில் மேலும் 27 சிறார்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த அரசு சாரா அமைப்பை மேற்கோள் காட்டி பாலஸ்தீனத்தின் வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த போர் தொடங்கியது முதல் தினசரி சராசரி 120 சிறார்கள் கொல்லப்படுவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று அது மேலும் குறிப்பிட்டது.
இந்த மரண எண்ணிக்கை இறுதியானதல்ல எனக் கூறிய அந்த அமைப்பு, ஏறக்குறைய 1,400 பேர் குண்டு வீச்சுத் தாக்குதலுக்குள்ளான கட்டிடங்களின் இடிபாடுகளில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான மற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உயிரத்தப்பிய சிறார்கள் கடுமையான மனோவியல் நெருக்கடியில் இருந்து வருவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறியது.
பாலஸ்தீன பகுதிகள் மீது கடந்த 16 ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் உளவியல் ரீதியான மற்றும் உணர்ப்பூர்வமான பாதிப்புகள் அங்குள்ளவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
கண்ணெதிரே மற்றச் சிறார்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அச்சிறார்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பம் முழுவதும் சிதைந்து போனதும் குடும்ப கட்டமைப்பே நிர்மூலமானதும் அவர்களின் மனநிலையை மேலும் பாதித்துள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டது.


