ANTARABANGSA

இந்தியாவிலிருந்து அரச தந்திரிகளை கனடா மீட்டுக் கொண்டது

20 அக்டோபர் 2023, 8:02 AM
இந்தியாவிலிருந்து அரச தந்திரிகளை கனடா மீட்டுக் கொண்டது

ஒட்டாவா, அக் 20 - சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் கனடா தனது  41 அரசதந்திரிகளை  இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது. இதற்கு எதிராக  ஒட்டாவா பழிவாங்கும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது என்று கனடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி நேற்று தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் சீக்கிய கோவிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜார் (45) என்பவரின் கொலைக்கும் இந்திய ஏஜெண்டுகளுக்கும் சாத்தியமான தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் நம்பத்தகுந்த ஆதாரம் தங்களிடம் உள்ளதாக   கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  கூறியதைத் தொடர்ந்து அரசதந்திரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு  புது டில்லி  ஒட்டாவாவைக் நிர்பந்தித்தது.

ராஜதந்திரிகள் வெளியேறாவிட்டால் வெள்ளிக்கிழமைக்குள் அவர்களின் அதிகாரப்பூர்வ அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்போவதாக இந்தியா மிரட்டியதாக ஜோலி கூறினார். இந்த நடவடிக்கை, நியாயமற்றது மற்றும்  இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதற்கு ஒப்பானது அவர் கூறினார்.

இந்தியாவின் நடவடிக்கைகளால் எங்கள் அரச தந்திரிகளுக்கு ஏற்படும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் என்றார் அவர் .

புது டெல்லி "பயங்கரவாதி" என்று முத்திரை குத்திய கனடிய குடிமகன் நிஜாரின் கொலையில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு  தொடர்பு இருக்கிறது என்ற  ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா அபத்தமானது எனக் கூறி நிராகரித்துள்ளது.

கனடாவின்  மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்தினர் அல்லது 20 லட்சம் பேர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். இந்திய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.