காஸா, அக் 18- காஸா மருத்துவமனையில் நேற்று நிகழ்ந்த
வெடிச்சம்பவத்தில் சுமார் 500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்த
வெடிச் சம்பவத்திற்கு இஸ்ரேலின் வான் தாக்குதலே காரணம் என்று
பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறினர்.
கடந்த 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்திலுள்ள மக்கள் நெரிசல்மிக்க
பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில்
இதுவே இரத்தக்களரிமிக்கச் சம்பவமாக கருதப்படுகிறது.
ஹமாஸ் போராளிகள் நடத்திய எல்லைக் கடந்த தாக்குதலுக்கு பதிலடி
கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டு
வருகிறது.
பாலஸ்தீனத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்க
அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னர் இந்த
தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இதுவரை உறுதி செய்ய
இயலவில்லை.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹமாஸ்
கட்டுப்பாட்டிலுள்ள காஸா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர்
குற்றஞ்சாட்டினார்.
இந்த தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாகக் காஸா பொது தற்காப்புப்
பிரிவுத் தலைவர் ஒருவர் கூறிய வேளையில் 500 பேர் வரை
பலியானதாகச் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், காஸாவிலுள்ள அல் அஹ்லி-அராபி மருத்துவமனை மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தாங்கள் காரணம் எனக் கூறப்படுவதை
இஸ்ரேல் மறுத்துள்ளது. ஜிஹாட் இஸ்லாம் பாலஸ்தீன இராணுவத்தினரின் இலக்குத் தவறிய தாக்குதல் அது என அந்நாடு கூறியது.


