கோலாலம்பூர், அக் 13- மானிய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கெடாவில் உள்ள ஐந்து அரிசி ஆலைகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி சி.) சோதனை நடத்தியது.
நேற்று மூன்று அரசி ஆலைகளில் சோதனை நடத்தப்பட்ட வேளையில் நேற்று முன்தினம் மேலும் இரண்டு ஆலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்று எம் ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
அரிசியை பதுக்கும் விவகாரமாக எம்.ஏ.சி.சி. பார்க்கவில்லை. மாறாக, ஊழல் கூறுகள் கொண்ட மானியப் பிரச்சினையாக பார்க்கிறது என்று அவர் சொன்னார்.
ஊழல் குற்றங்கள், குறிப்பாக மானியங்கள் தொடர்பான அரசாங்க நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படும் விவகார ரீதியில் இந்தப் பிரச்சனையை எம்.ஏ.சி.சி. அணுகுகிறது என்று அவர் கூறினார்.
நேற்று இங்கு நடைபெற்ற பொதுத் "தனியார் கூட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்: குற்றங்களை கையாள்வதில் உள்ள ஒருமைப்பாட்டுக்கான பொதுவான சவால்" எனும் தலைப்பிலான நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எம்.ஏ.சி.சி. தனது நடவடிக்கையில் (கெடாவில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை) எந்தவொரு அரசியல்வாதியையும் அல்லது மாநில அரசாங்கத்தையும் குறிவைக்கவில்லை. மாறாக, பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புகார்களை ஆராய்வதே எங்கள் வேலை என்று அவர் கூறினார்.
முறைகேடு நிகழ்ந்துள்ளதா என்பதைப் கண்டறிய கோரிக்கை ஆவணங்களை எம்ஏசிசி ஆய்வு செய்யும் என்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட தரப்பை தமது தரப்பு அழைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பின்னணியை ஆராயாமல் நிபுணததுவ அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதே எங்களின் இலக்காகும் என்றார் அவர்.


