கப்பளா பத்தாஸ், அக் 11- இங்குள்ள மாக் மண்டினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (ஐஇடி) கொண்ட பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் தனது அண்டை வீட்டார் மீது கொண்ட கோபம் காரணமாக அந்த அடாதச் செயலைச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது அண்டை வீட்டாரான ஒரு முதியவர் தன்னை அடிக்கடி கேலி செய்ததால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த 32 வயதான உள்ளூர் நபர் வெடித் தாக்குதலை நடத்தியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செபராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸ்ரி ஷாபி கூறினார்.
தம்மை சதா கேலி செய்யும் அண்டை வீட்டாரை பயமுறுத்தவும் எச்சரிக்கவும் தாம் அந்த வெடிமருந்தை வெடிக்கச் செய்ததாக சந்தேகப்பேர்வழி கூறியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் தாமான் பாண்டன் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள தனது அண்டை வீட்டின் முன் வெடிமருந்தை வைத்துள்ளார். அந்த வெடிமருந்து வெடித்ததில் வீட்டின் இரும்பு கிரில் கதவு மற்றும் தாழ்வாரப் பகுதியில் சேதம் ஏற்பட்டது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
எனினும், இந்த வெடிவிபத்தினால் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மற்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதைத் தீர்மானிக்க போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஐ.இ.டி. வெடிமருந்து தவிர அவரது வீட்டில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி சிறிய வளைந்த கத்தி ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நபரின் பின்னணி, வெடிமருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது யாருக்காவது விற்கப்பட்டதா என்பதை கண்டறிய புக்கிட் அமான் போலீஸ் குழுவை உள்ளடக்கிய விரிவான விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.


