பட்டர்வெர்த், அக். 10- இங்குள்ள தாமான் பாண்டன் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து (ஐஇடி) அடங்கிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் ஆடவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மதியம் 12.57 மணியளவில் ஒரு வீட்டின் முன் வெடிச் சத்தம் கேட்டதாக பெண்ணிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.
மதியம் 1.05 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியின் ஐந்தடியில் ஒரு ஐ.இ.டி. பொட்டலத்தை சாட்சி கண்டுபிடித்ததாக அவர் சொன்னார்.
அதைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு , தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய்ப் பிரிவு (கே9) ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆய்வின் முடிவில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐ.இ.டி.) என்று கண்டறியப்பட்டது என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர் கொடுத்த தகவலின் பேரில் அந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள அவரது வாடகை வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மற்றொரு ஐ.ஈ.டி. வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.
வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை இணையத்தின் மூலம் தாம் கற்றுக்கொண்டதை அந்நபர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார்.
32 வயதான சந்தேக நபரும், தொழிற்சாலையில் பணிபுரியும் 38 வயதுப் பெண்ணும் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த வியாழக்கிழமை வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


