ஆயர் குரோ, அக் 9- பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இந்த பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தரப்பிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இடமாற்றம் செய்யப்படும் பள்ளிகளுக்கு முதலில் நிலங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உட்பட இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
மலாக்கா மாநில தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொன்மாலை பொழுது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் .
மலாக்கா தமிழர் சங்கத்தின் சொந்தக் கட்டடத்தின் மண்டபத்தில் தமிழவேள் கோ. சாரங்கபாணி கூட்ட அறையில் மலாக்கா தமிழர் சங்கத் தலைவர் சு. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு மக்கள் சேவகன் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


