கோலாலம்பூர், அக்டோபர் 6: இங்குள்ள டேசா துன் ரசாக் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 32 வயது நபர் தீக்காயமடைந்தார் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
இச்சம்பவம் தொடர்பாக இரவு 10.59 மணி அளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"சுங்கை பெசி மற்றும் பண்டார் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து (பிபிபி) இயந்திரங்களுடன் மொத்தம் 16 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
" சம்பவ இடத்தை அடைந்தவுடன் பிளாக் 4இன் 10 வது மாடியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இத்தீவிபத்து எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் அருகிலுள்ள இரண்டு வீடுகளும் எரிந்தன" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதில் 32 வயதான நபர் ஒருவர் பாதிக்கப்பட்டார் அதாவது சுமார் 30 சதவீத தீக்காயங்களுக்கு ஆளானார் என்று மெட்ரோ ஹரியன் தெரிவித்துள்ளது.
அந்நபர் துவாங்கு முஹ்ரிஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டார் மற்றும் அவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
“தீ விபத்தில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன, அவை தீவிபத்தால் இடிந்து விழுந்து பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் ஆகும்,” என்று அவர் கூறினார். இச்சம்பவம் இன்னும் விசாரணையில் உள்ளது.








