ஹாங்ஸோவ், அக் 6- கராத்தே போட்டியின் மகளிர் தனிநபர் பிரிவில்
இளம் விளையாட்டாளரான லவ்லி அனி ரோபர்ட் வியப்பூட்டும் விதமாக
வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஆசியப் போட்டியில் 27
பதக்கங்களை வெல்லும் தனது இலக்கை மலேசியா பூர்த்தி செய்துள்ளது.
இங்குள்ள லின்பிங் ஜிம்னிசியம் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற
கராத்தே போட்டியின் இறுதிச் சுற்றில் களமிறங்கிய சபாவைச் சேர்ந்த 19
வயதே நிரம்பிய லவ்லி அனி, 39.80 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப்
பிடித்தார்.
இப்போட்டியில் 40.60 புள்ளிகளுடன் ஜப்பானிய விளையாட்டாளரான கியோ
ஜிமிஸூ தங்கப்பத்தக்கம் வென்றார். இதன் வழி கடந்த 2014 முதல்
இப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் வென்று வரும்
விளையாட்டாளராக கியோ விளங்குகிறார்.
இந்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பிலிப்பைன்சின் சகுரா
அலிஃபோர்த்தே மற்றும் ஹாங்காங்கின் கிரேஸ் லாவு கூட்டாக
வென்றனர்.
கடந்த 13ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசிய கராத்தே குழுவுக்கு கிடைத்த
முதல் பதக்கமாக இது விளங்குகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சீனாவின்
குவாங்ஸோவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் மலேசியாவின் லீ லீ
வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


