ஷா ஆலம், அக் 4- இவ்வாண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான
இரண்டாம் தவணைக்கும் மலிவு விலை மற்றும் கிராமப்புற வீடுகளுக்கும்
மாநில அரசு மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதிலிருந்து
விலக்களித்துள்ளது. இதன் வழி 426,656 குடியிருப்பாளர்கள் பயன் பெறுவர்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசின் 100 நாள் ஆட்சியின் கடப்பாடுகளில் ஒன்றாக இந்த வரி
விலக்குத் திட்டம் விளங்குவதாகக் கூறிய அவர், இந்த திட்டம்
மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் சம்பந்தப்பட்ட 2 கோடியே 94
லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி நிதியை உட்படுத்தியிருக்கும் என்றார்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்டத்
தரப்பினர் வருமானத்தைப் பெருக்கவும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக்
குறைக்கவும் இயலும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில்
நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த விபரங்களை
வெளியிட்டார்.
மாநில அரசு தனது ஐந்து வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தனது தேர்தல் கொள்கையறிக்கைகளை
நிறைவேற்றும் என்று அமிருடின் கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி
கூறியிருந்தார்.
வீடுகளுக்கான வரி விலக்கு தவிர்த்து இமாம், பிலால் மற்றும் சியாக்
அலவன்ஸ் உயர்வு, 500 விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்ககுச் சிறப்பு
ஊக்குவிப்பு உள்ளிட்ட திட்டங்களும் மாநில அரசின் தேர்தல்
வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளன.
கிராம மற்றும் மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விலக்களிக்கும்
திட்டத்தை மாநில அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி
வருகிறது.








