கோலாலம்பூர், அக் 4- இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு
மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு
பருவமழையை எதிர்கொள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
24,283 உறுப்பினர்களைத் தயார் நிலையில் வைத்துள்ளது.
தீயணைப்பாளர்களுக்குப் படகுகளைக் கையாளுதல், நீர் மீட்பு, துரித நீர்
மீட்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குவதும் இந்த தயார் நிலை
ஏற்பாடுகளில் அடங்கும் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கை பிரிவு இயக்குநர் டத்தோ அகமது இர்ஸாம் ஓஸ்மான்
கூறினார்.
இது தவிர, உயிர்க்காப்பு படகுகள் மற்றும் நீர் மீட்பு சாதனங்கள்
செயல்படும் நிலையில் இருப்பதை தாங்கள் சோதித்து உறுதி செய்யும்
பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவசர வேளைகளில் போதுமான எண்ணிக்கையில் தீயணைப்பாளர்கள்
இருப்பதை உறுதி செய்வதற்கு உறுப்பினர்களின் விடுமுறைகள் ரத்து
செய்யப்படும். பணி நேரம் 12 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரமாக
அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வெள்ள அபாயம் உள்ள 4,795 இடங்களை தாங்கள்
அடையாளம் கண்டுள்ளதாகக் கூறிய அவர், அவற்றில் மிக அதிகமாக
சரவா மாநிலத்தில் 1,034 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
என்றார்.
சரவா மாநிலத்திற்கு அடுத்த நிலையில் கிளந்தான் (595 இடங்கள்), பகாங்
(554), சபா (520), ஜோகூர் (432), சிலாங்கூர் (307), பினாங்கு (281), பேராக் (265),
திரங்கானு (262), கெடா (228), மலாக்கா (124), நெகிரி செம்பிலான் (92),
கோலாலம்பூர் (35), லபுவான் (18) இடங்கள் உள்ளன என்று அவர்
சொன்னார்.








