லண்டன், செப் 26- சூலு சுல்தான் வாரிசுகள் எனக்கூறிக் கொள்ளும்
தரப்பினர் உள்பட எந்த தரப்பினரிடமிருந்து வரும் அற்பத்தனமான
கோரிக்கைகளை மலேசியா அங்கீகரிக்காது என்பதோடு அதனை
கவனத்திலும் கொள்ளாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி
அப்துல் காடீர் கூறினார்.
கடந்த 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி கூட்டமைப்பு
உருவாக்கப்பட்டது முதல் சபாவை மலேசியாவின் ஒரு பகுதியாக
ஐ.நா.வும் அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளன என்று அவர்
சொன்னார்.
கடந்த வாரம்தான் நாம் 60வது மலேசிய தினத்தை கொண்டாடிய
நிலையில் இந்த ஆய்வரங்கு மிகவும் பொருத்தமான தருணத்தில்
நடத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள அனைத்துலக தகராறு தீர்வு மையத்தில் நேற்று நடைபெற்ற
வர்த்தக மத்தியஸ்தத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு
என்பது மீதான 2023 லண்டன் அனைத்துலக மத்தியஸ்த ஆய்ரங்கில்
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சூலு வாரிசுகள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினருக்கு எதிராக பிரான்ஸ்
மற்றும் டச்சு நீதிமன்றங்கள் இவ்வாண்டு தொடக்கத்தில் வரலாற்றுப்
பூர்வ தீர்ப்பை வழங்கிய போதிலும் மலேசியா இன்னும் எதிர்பாராத சட்டப்
போராட்டங்களைச் சந்தித்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த சட்ட நடவடிக்கை நமது விலைமதிப்புமிக்க வளங்களுக்கு இழப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டப் போராட்டத்திற்கு செலவிடும் பணத்தை
மலேசியாவில் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு
பயன்படுத்தலாம் என்றார் அவர்.
இழப்பீடு தொகையைத் வழங்க இந்த வழக்கில் அளிக்கப்பட்டத்
தீர்ப்பானது மலேசியாவின் தலையெழுத்தையும் அதன் வளங்களையும்
இந்த பிராந்தியத்துடன் சிறிதும் தொடர்பில்லாத யாரோ சிலர் அல்லது
தனிநபர் தீர்மானிக்க முடியும் என்பதைத் தான் சிறிதும் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.


