ஜோகூர் பாரு, செப் 25- இங்குள்ள கோத்தா திங்கியில் நேற்று முன்தினம்
நடைபெற்ற டெசாரு இண்டர்நேஷனல் பைக் வீக் என்ற அனைத்துலக
மோட்டார் சைக்கிள் நிகழ்வில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் இரு
ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைகலப்பில் லேசான காயங்களுக்குள்ளான 30 மற்றும் 50
வயதுடைய அவ்விருவரும் கோத்தா திங்கியில் நேற்று கைது
செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள்
ஜமான் மாமாட் கூறினார்.
இந்த கைகலப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆடவர் ஒருவருக்கு
கோத்தா திங்கி மருத்துவமனையில் தலையில் நான்கு தையல்கள்
போடப்பட்டன என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மலேசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த
குழு உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறிய அவர், இதில் சம்பந்தப்பட்ட இதர
நபர்களைத் தாங்கள் தேடி வருவதாகச் சொன்னார்.
இந்த கைகலப்பில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை
கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை அமெரிக்காவின்
அரிஸோனாவைச் சேர்ந்த 70 முதல் 80 பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளது
தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
அந்த கும்பல் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுள்ளனர்.
இதுவே மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது தொடக்க கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இங்குள்ள மாநில போலீஸ்
தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.
இந்த அனைத்துலக மோட்டார் சைக்கிள் நிகழ்வில் 350 போலீஸ்காரர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறிய அவர், பணியில் இருந்த
காவல்துறையினர் விரைந்து தலையிட்டு சண்டையை நிறுத்தியாகச்
சொன்னார்.


