கோலாலம்பூர், செப் 20 - இவ்வாண்டின் முதல்
எட்டு மாதங்களில் போதைப்பொருள்
குற்றங்கள், பணிக்கு வராதது மற்றும் குற்றச்
செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச்
சேர்ந்த 18 அதிகாரிகள் மற்றும்
உறுப்பினர்கள் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் ஆறு பேர் இதே
காலகட்டத்தில் பதவி இறக்கம்
செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லாவுடின்
அப்துல் மஜிட் கூறினார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின்
உயர்நெறி மற்றும் விதி பின்பற்றல் துறை
இத்தகைய புகார்கள் தொடர்பில் 157
விசாரணை ஆவணங்களையும்
திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன்
ஒப்பிடுகையில் இது வீழ்ச்சியைக்
காட்டுகிறது. காவல் துறை உறுப்பினர்கள்
மற்றும் அதிகாரிகள சம்பந்தப்பட்ட பல்வேறு
தவறான நடவடிக்கைகள் தொடர்பில்
மொத்தம் 164 விசாரணை அறிக்கைகள்
அக்காலக்கட்டத்தில் திறக்கப்பட்டன என்று
இன்று கோலாலம்பூர் காவல்துறையின்
மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வுக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சமூகத்திற்குத் தரமான சேவைகள்
வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில்
இத்தகைய கடுமையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அணுக்கமான கண்காணிப்பைச் செயல்படுத்தத்
தவறியது காவல்துறை அதிகாரிகள் மற்றும்
உறுப்பினர்களிடையே தவறான நடத்தை
தொடர்பான புகார்கள் எழுவதற்கான
காரணங்களில் ஒன்றாகும். அனைத்துத்
துறைத் தலைவர்கள், மாவட்ட காவல்துறைத்
தலைவர்கள் மற்றும் தலைமைக்
கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புக்குப்
பொறுப்பேற்க வேண்டும் என்று நான்
கேட்டுக்கொள்கிறேன் என்று அல்லாவுடின்
கூறினார்.








