NATIONAL

மித்ரா வுக்கு ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி முழுமையாகச் செலவிடப்பட்டது- டத்தோ ரமணன் தகவல்

20 செப்டெம்பர் 2023, 7:52 AM
மித்ரா வுக்கு ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி முழுமையாகச் செலவிடப்பட்டது- டத்தோ ரமணன் தகவல்

புத்ராஜெயா, செப் 20- மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி முழுமையாகச் செலவிடப் பட்டதாக அப்பிரிவின் சிறப்பு பணிக் குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட, தற்போது அமலில் இருந்து வரும் மற்றும் எதிர்காலத்தில் அமல்படுத்தப் படவுள்ள திட்டங்களை அந்த பத்து கோடி வெள்ளி உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி வெள்ளி முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டது என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இது மிகச் சிறப்பான அடைவு நிலையாகும். காரணம், கடந்த ஆண்டில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 63 விழுக்காட்டும் 2021ஆம் ஆண்டில் 73 விழுக்காடும் 2020ஆம் ஆண்டில் 63 விழுக்காடும் மட்டுமே செலவிடப்பட்டது என்று இன்று இங்கு நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித் தொகை, தனியார் பாலர் பள்ளி கல்விக்கான உதவித் தொகை, டயாசிலிசிஸ் சிகிச்சைக்கான உதவித் தொகை மற்றும் 72 மக்கள் பிரதிநிதிகள் சமூக சேவை மையங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.

இது தவிர விரைவில் அமல்படுத்தப்படவுள்ள சில திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீட்டு ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் மித்ரா தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய குடும்பங்களுக்கான பரம ஏழ்மை ஒழிப்புத் திட்டத்தையும் மித்ரா மேற்கொள்ளவுள்ளதாகக் கூறிய அவர், இந்த திட்டம் தொடர்பான விரிவான விபரங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்றார்.

இந்த திட்ட  அமலாக்கத்தில்  பிரதமர் துறையுடன் இணைந்து  மித்ரா செயல்படும். முதல் கட்டமாக கோலாலம்பூரில் உள்ள வறிய நிலையிலுள்ள இந்திய குடும்பங்கள் மீது கவனம் செலுத்தப்படும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இ-காசே ஒருங்கிணைப்பு பிரிவின் வாயிலாக 1,800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அக்குடும்பங்களின் சராசரி வருமானம் 339 வெள்ளிக்கும் குறைவாக உள்ளது என ரமணன் சொன்னார்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு 82 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.