கோலாலம்பூர், செப் 20- சுமார் 875,000 வெள்ளி மதிப்பிலான பள்ளி
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகையாளர்களாக
கல்வியமைச்சு தங்களை நியமித்துள்ளதாக மேலாளர் வாரியத்தை நம்ப
வைத்ததாக இரு குத்தகையாளர்களுக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ரோஸினா ஆயோப் முன்னிலையில் தங்களுக்கு எதிராக
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முகமது ஷாபிக் முகமது (வயது 40) மற்றும்
சியா செங் நாம் (வயது 48) ஆகிய இருவரும் மறுத்து விசாரணை
கோரினர்.
அந்த 875,000 வெள்ளியைப் பெறுவதற்காக செமினி தோட்டத்
தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தை நம்பவைத்ததாக அவ்விருவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 மற்றும் அக்டோபர் 8 தேதிகளுக்கு
இடையே தாமான் மீடாவில் உள்ள ஆர்.எச்.பி. வங்கியில் இந்த
குற்றத்தைப் புரிந்ததாக அவ்விருவரும் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் பத்தாண்டு
வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை
செய்யும் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின்
34வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு
வரப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 50,000
வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதோடு கூடுதல் நிபந்தனையாக அனைத்துலக
கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் ஒவ்வொரு மாதத்தின் முதல்
வாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் ஆஜராகவும்
எஸ்.பி.ஆர்.எம். வழக்கறிஞர் முகமது அலிஃப் ஷாஹாருஸமான்
நீதிமன்றத்தில் பரிந்துரைத்தார்.
எனினும், இந்த விசாரணையின் போது தமது கட்சிக்காரர்கள் ஊழல் தடுப்பு
ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் அவர்களை தலா 12,000
வெள்ளி ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவ்விருவரின்
வழக்கறிஞரான ரிட்ஹா அப்டா சுப்ரி கேட்டுக் கொண்டார்.
அவ்விருவரையும் தலா 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி
வழங்கிய நீதிபதி இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் அக்டோபர்
25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.








