கோலாலம்பூர், செப் 20- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை
பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை எட்டினால் எண்ணெய்க்கான
அரசாங்கத்தின் உதவித் தொகை ஆண்டுக்கு 10,000 கோடி வெள்ளியை
தாண்டும் என பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.
நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கு பெரிய மாற்றத்தை கொண்டு
வரும் போது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியம் என்பது தவிர்க்க
முடியாத ஒன்றாகி விடும் என அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகைத்
திட்டத்தை அமல்படுத்து தொடர்பான அரசியல் தேவை குறித்து
தித்திவங்சா தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல்
கனி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கம் சரியானதைச் செய்யும் என்பதோடு இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகை செயல்முறையில் முழுமையான
மாற்றங்களையும் அமல்படுத்தும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ரோன் 95 பெட்ரோல், டீசல், திரவமய எரிவாயு (எல்.பி.ஜி.) மற்றும் மின்சார
உதவித் தொகைக்காக அரசாங்கம் கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தம்
8,000 கோடி வெள்ளியைச் செலவிட்டது தற்போது உலக சந்தையில் கச்சா
எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 95 அமெரிக்க டாலராக உயர்வு
கண்டுள்ளது. விரைவில் இது 100 டாலரை எட்டும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரை எட்டும் போது
அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையின் மதிப்பு 10,000 கோடி டாலரை
எட்டும் என்று 12வது மலேசியத் திட்ட மத்திய தவணைக்கான மதிப்பாய்வு
மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்
தெரிவித்தார்.








