ஷா ஆலம் செப் 19- கேரித் தீவில் அமைக்கப்படவிருக்கும் கிள்ளான்
துறைமுகத்தின் மூன்றாவது முனையம், வரும் 2060ஆம் ஆண்டுவாக்கில்
4,030 கோடி வெள்ளி மதிப்பிலான நேரடி அல்லது மறைமுக நிகர கூடுதல்
மதிப்பை (ஜி.வி.ஏ.) கொண்டு வரும்.
அதோடு மட்டுமின்றி, கேரித் தீவில் அமல்படுத்தப்படவிருக்கும்
மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக சிறந்த போக்குவரத்து, அடிப்படை
வசதிகள் மற்றும் குடிநீர், மின்சார இணைப்புகளை அத்தீவிலுள்ள பூர்வக்
குடியினர் உள்பட அனைவரும் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும்
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய தவணைக்கான
போக்குவரத்து அமைச்சின் மதிப்பாய்வு மீதான விவாதத்தை முடித்து
வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையினால்
அங்கீகரிக்கப்பட்ட கேரித் தீவு மேம்பாட்டுப் பெருந்திட்டத்தில் இந்த
மூன்றாவது துறைமுக முனையமும் இடம் பெற்றுள்ளதாக அவர்
சொன்னார்.
இந்த கேரித் தீவு மேம்பாட்டுத் திட்டத்தை விரிவான அளவில்
மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் போக்குவரத்து அமைச்சு,
கிள்ளான் துறைமுக வாரியம் ஆகியவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன
என்றார் அவர்.
இந்த மேம்பாட்டுப் பெருந்திட்டத்தை போக்குவரத்து அமைச்சு சிலாங்கூர்
மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் அல்லது மாநில அரசிடம்
சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேரித் தீவில் அமைக்கப்படவிருக்கும் புதிய துறைமுகம் கிள்ளான்
துறைமுகத்தைப் பிராந்திய கப்பல் மாற்று மையமாக மாற்றும் என பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக கூறியிருந்தார்.








