நியூயார்க், செப் 19 - ஐக்கிய நாடுகள்
சபையின் (ஐ.நா.) பொதுப் பேரவையில்
பங்கேற்கும் மலேசியப் பேராளர் குழுவிற்கு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமை தாங்குகிறார்.
இந்த வருடாந்திரப் பேரவையில் முதன்
முறையாகப் பங்கேற்கும் டத்தோஸ்ரீ
அன்வார், பருவநிலை நெருக்கடி மற்றும்
2030 பணி நிகழ்ச்சி நிரலை அடைவதில்
மலேசியாவின் முயற்சிகள் குறித்து
உயைமாற்றுவார்.
மலேசியா மடாணி கட்டமைப்பு
குறித்தும் பிரதமர் பகிர்ந்து கொள்வார்.
மலேசியா மடாணி என்றால் என்ன என்பதை
உலகிற்கு தெரியப்படுத்துவது எங்களுக்கு
மிகவும் முக்கியம் என்று வெளியுறவு
அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காடிர்
கூறினார்.
இங்குள்ள ஐ.நா. தலைமையகத்தில் உள்ள
மலேசியாவின் நிரந்தர தூதரக அலுவலகத்தில்
நேற்று மலேசிய ஊடகங்களுக்கு வழங்கியப்
பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர்
டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ், வெளியுறவு
அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ
அம்ரான் முகமது ஜின், ஐ.நா.வுக்கான
நிரந்தரப் பிரதிநிதி அஹ்மது பைசல் முகமது
ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றர்.
நாளை நியூயார்க் வரவிருக்கும் பிரதமர்
அன்வார், வெள்ளிக்கிழமை நடைபெறும்
பொது விவாதத்தில் மலேசியாவின் தேசிய
அறிக்கையை வழங்குவார் என்று ஜாம்ரி
கூறினார்.
அன்வாருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்,
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின்
நசுத்தியோன் இஸ்மாயில், முதலீடு, வர்த்தகம்
மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸ், சுகாதார
அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா மற்றும்
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அரசாங்க அதிகாரிகள் இம்மாநாட்டிற்கு
வருகை புரிந்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 26 வரை நடைபெறும் இந்த
பொதுப் பேரவையில் 157 நாடுகளைச் சேர்ந்த
தலைவர்கள் மற்றும் 35 அமைச்சர்கள்
உரையாற்றுவார்கள்.


