புத்ராஜெயா, 18 செப்.: சமூக நலத் துறையின் (ஜே.கே.எம்.) கீழ் இருந்த குழந்தைகள் பிரிவுக்குப் பதிலாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நிறுவப்பட்டது என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, , மோசமாகி வரும் குழந்தைகளின் புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சனைகளை கையாள்வதில் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சிறந்த தீர்வாகும் என்று பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
" இந்தத் துறை தடுப்பு, மேம்பாடு, பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைத்தல் ஆகிய ஐந்து முக்கிய அமசங்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தரமான சேவைகளை வழங்குவதில் திறன் வாய்ந்ததாக நம்பப்படுகிறது," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வுக்காகச் செயல்திறன், பயனுள்ள மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு 169 ஒப்பந்த ஊழியர்களை அத்துறை அங்கீகரித்துள்ளது என்றார்.
குழந்தைகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு தொடர்பான வழக்குகளைத் ``தாலியன் காசிஹ்`` 15999ல் அல்லது 24 மணி நேரமும் செயல்படும் 019-2615999 புலனம் மூலம் தெரிவிக்குமாறும் நான்சி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகளுக்கு விரிவான சேவைகளை வழங்க குழந்தைகள் மேம்பாட்டு துறையை உருவாக்கும் என்று பிரதமர் 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது தெரிவித்தார்.
– பெர்னாமா








