ஜார்ஜ் டவுன், செப் 18: ஜாலான் கம்போங் பிசாங், ஆயர் இத்தாமில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்த நிலையில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் (OKU) இறந்தார்.
இவ்விபத்தில் எரிந்த இரண்டு வீடுகளில் ஒன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்ட 60 வயது மாற்றுத்திறனாளி முதியவரின் அடையாளம் இன்னும் கண்டறியவில்லை என பினாங்கில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் (பிஜிஓ) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 3.44 மணி அளவில் தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை அடைந்தவுடன் தீயணைப்புப் படையினர், அருகருகே அமைந்துள்ள இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். நாங்கள் தீயை அணைப்பதற்கு நடவடிக்கையை எடுப்பதற்கு முன், தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த தீ விபத்தில் இரண்டு ஒற்றை மாடி வீடுகள் எரிந்து நாசமானது, ஒவ்வொன்றும் சுமார் 1,250 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக அவர் கூறினார்.
இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்றார்.
அதிகாலை 4.28 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இத்தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
– பெர்னாமா


