கோட்டா பாரு, செப் 18: ஜாலான் ஊதான் குயின், மச்சாங்கில் உள்ள ஒரு பட்டறையின் முன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட நபர், குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்த கால பதிவைக் கொண்டிருந்தார்.
இச்சம்பவம் மாலை 5.45 நிகழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய நபர் ஒரு வர்த்தகர் ஆவார் என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
“முதற்கட்டத் தகவலின் அடிப்படையில், வெள்ளை நிற ஹோண்டா காரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்ட நபரை நோக்கி பல துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர்.
"அந்த சம்பவத்தில் ஓட்டுனர் பக்கத்தில் இருந்த நபர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். சம்பவத்திற்கு காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மச்சாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்க பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


