புத்ரா ஜெயா, செப் 18- போர்ட்டிக்சனில் மேற்கொள்ளப்பட்ட சாலைத்
தடுப்புச் சோதனையின் போது சாலை போக்குவரத் அதிகாரியை
(ஜே.பி.ஜே.) மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிளோட்டி இன்னும்
தீர்க்கப்படாத இரு கருப்பு பட்டியல் பதிவுகளைக் கொண்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் காலாவதியான லைசென்ஸ்சுடன் மோட்டார்
சைக்கிளை ஓட்டியது, காப்புறுதி இல்லாதது, வாகனமோட்டும் லைசென்ஸ்
இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக 25 வயதுடைய அந்த நபர் 1987ஆம்
ஆண்டு சாலை போக்குவரத்துக் குற்றத்தின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டதோடு அவரின் யமாஹா ரக மோட்டார் சைக்கிளும்
பறிமுதல் செய்யப்பட்டதாக ஜே.பி.ஜே. அறிக்கை ஒன்றில் கூறியது.
அரசாங்க அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக சாலை
போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின்
186வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக அந்த இளைஞர்
போர்ட்டிக்சன் போக்குவரத்து அமலாக்க விசாரணைப் பிரிவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார் என அது தெரிவித்தது.
சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28வது கிலோ மீட்டரில் நேற்று
காலை 11.00 மணியளவில் ஜே.பி.ஜே. அதிகாரிகள் மேற்கொண்ட சாலை
தடுப்புச் சோதனையின் போது அதிகாரி ஒருவர் மோட்டார்
சைக்கிளோட்டியால் மோதப்படுவதை சித்தரிக்கும் காணொளி நேற்று
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஜே.பி.ஜே. அதிகாரிக்கு லேசான காயம்
ஏற்பட்டது. போர்ட்டிசன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர்
அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, அரசாங்க ஊழியரை அச்சுறுத்துவதற்காக கிரிமினல்
வன்முறையைப் பயன்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 353வது
பிரிவின் கீழ் அந்த மோட்டார் சைக்கிளோட்டி தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரண்டெண்டன் அய்டி ஷாம் கூறினார்.
குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான எட்டு முந்தைய
குற்றப்பதிவுகளைக் கொண்டிருக்கும் அந்த ஆடவர் இன்று போர்ட்டிக்சன்
நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.








