கோலா நெருஸ், செப் 17: கடந்த வியாழன் அன்று, இம்மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், படிவம் ஒன்றைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பான புகார் காவல்துறைக்குக் கிடைத்தது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் தாக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் கோலா திரங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அப்துல் ரஹீம் முகமட் டின் கூறினார்.
"சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரின் முகம் மற்றும் உடலை உதைத்து தாக்கியுள்ளனர்," என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
மதியம் 12.30 மணியளவில் பள்ளிப் பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்து அறிந்த ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக அப்துல் ரஹீம் கூறினார்.
மாணவர் ஒருவரை மற்ற மாணவர்கள் தாக்கும் சம்பவம் பதிவாகிய வீடியோ ஒன்று டிக்டோக் செயலியில் வைரலாக பரவி வருவதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரங்கானு மாநிலக் கல்வித் துறையும் (ஜேபிஎன்டி) இச்சம்பவம் தொடர்பான அறிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்தியது.








