ஷா ஆலம், செப் 16- பெஸ்தாரி ஜெயா, ராஜா மூடா மூசா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் 99வது பிரிவில் உள்ள சதுப்புநிலக் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சி நேற்று முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடி வரும் வேளையில் மலேசிய பொது தற்காப்பு படை மற்றும் வன இலாகா அவர்களுக்கு துணை புரிந்து வருவதாக கோல சிலாங்கூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் தலைவர் முகமது ராய்ஸ் ரிட்சுவான் கூறினார்.
நேற்று மாலை 6.00 மணி நிலவரப்படி 12.5 விழுக்காட்டுப் பகுதியில் தீ அணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தீயை அணைக்கும் பணி வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.


