ஷா ஆலம், செப் 15 – நேர்மையற்ற நிதி கோரலைக் சமர்பித்த கிள்ளான் பகுதி விவசாயிகள் அமைப்பின் (AFO) உதவி பொருளாதார விவகார அதிகாரி ஒருவருக்கு, இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் RM17,000 அபராதம் விதித்தது.
ஒரு பொய்யான விலைப் பட்டியலைப் பயன்படுத்தியதற்கான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, முகமட் ஜமாடி முகமட் ஜைனுக்கு (43) நீதிபதி டத்தோ அனிதா ஹாருன் தண்டனை விதித்தார்.
முகமட் ஜமாடி ஜனவரி 15 2018 அன்று இங்கு அருகிலுள்ள AFO கிள்ளான் அலுவலகத்தில் RM17,000 மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் விலைப்பட்டியலை நேர்மையற்ற முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 471 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அக்குற்றம் அதே சட்டத்தின் 465 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
வழக்கறிஞர் ஐனுல் அஸ்வான் @ ஐனுல் அசிரஹ்மான் சார்பில் ஆஜரான முகமட் ஜமாடி அபராதத்தை செலுத்தினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணை அரசு வழக்கறிஞர் இர்னா ஜூலிசா மாரஸ், அரசுத் தரப்பில் ஆஜரானார்.
- பெர்னாமா








