ஷா ஆலம், செப் 15- கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி இங்குள்ள
பண்டார் எல்மினால் நிகழ்ந்த பீச்கிராப்ட் மாடல் 390 பிரீமியர் 1 ரக இலகு
ரக விமான விபத்து தொடர்பான பூர்வாங்க அறிக்கை இன்று
வெளியிடப்பட்டது.
விபத்தில் சிக்கிய அந்த விமானம் நல்ல முறையில்
பராமரிக்கப்பட்டுள்ளதோடு விமானிகள் செயல்திறனைப் பாதிக்கக்கூடிய
திறன் ரீதியான அல்லது உடல் ரீதியான இயலாமையும் காரணமாக
அமையவில்லை என்று அந்த விசாரணை அறிக்கை கூறியது.
எனினும், இந்த விபத்து தொடர்பான உண்மையான காரணம் இறுதி
அறிக்கையில் மட்டுமே வெளியிடப்படும் எனவும் அது தெரிவித்தது.
இந்த விபத்து நிகழ்வதற்கு முதல் நாள் இரவு விமானி நல்ல
உடலாரோக்கியத்துடன் இருந்தது சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை
உறுதிப்படுத்துவதாக போக்குவரத்து அமைச்சின் விபத்து விசாரணை
மையம் வெளியிட்ட அந்த பூர்வாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விமானம் லங்காவியிலிருந்து புறப்படுவதற்கு முன் விமானிக்குப்
போதுமான அளவு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இவ்விமானத்தை விமானி
ஷாருள் கமால் ரோஸ்லான் (வயது 41) செலுத்திய வேளையில்
ஹைக்கல் அராஸ் அப்துல் அஸிம் வயது 44) துணை விமானியாகச்
செயல்பட்டுள்ளார்.
அவ்விரு விமானிகளும் மத்திய வான் போக்குவரத்து நிர்வாகம் மற்றும்
மலேசிய சிவில் போக்குவரத்து நிர்வாகத்தின் செல்லத்தக்க மருத்துவ
சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.
விமான இயந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அந்நியப் பொருள்கள்,
பறவைகளின் சிறகுகள் அல்லது வேறு அம்சங்களும் இந்த விபத்துடன்
தொடர்புபடுத்தப்படவில்லை என அந்த அறிக்கை குறிப்பிட்டது.








