புத்ராஜெயா, செப் 15 - முடிதிருத்தும் கடைகள், துணிக்கடைகள் மற்றும் நகை கடைகள் ஆகிய வணிகத் துறையின் துணை பிரிவுகளில் வெளிநாட்டு பணியாளர்களை சேர்ப்பது மீதான வழி முறைகளை மேம்படுத்துவதற்காக மனிதவள மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையே அடுத்த வாரம் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மூன்று துணைப் பிரிவுகளுக்கான புதிய விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்படும் என்று மனிதவளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறினார்.
"விண்ணப்பங்கள் இன்னும் திறக்கப்படவில்லை, விரைவில் திறக்கப்படும்," என்று அவர் இன்று மலேசியாவில் கட்டாய தொழிலாளர் முறையை அகற்றுவது மீதான கருத்தரங்கை நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமைச்சரவை யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று துணைத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட 7,500 வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்ப நிலை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முடக்கப்பட்ட மூன்று துணைத் துறைகளுக்கான வெளிநாட்டு பணியாளர்களை சேர்ப்பு, செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒரு பகுதியை,
செப்டம்பர் 4 அன்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்த தாகக் கூறினார்.
இருப்பினும், மூன்று துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளூர் இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அன்வார் நிபந்தனை விதித்தார்.
முன்னதாக, மூன்று துணைத் துறைகளில் கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாகப் பல முதலாளிகள் தங்கள் வணிகங்களை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என சிவக்குமார் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.








