கோலாலம்பூர், செப் 15- தனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையில்
காவல் துறைக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்திற்காக இணைய
பதிவேட்டாளரான சேகுபார்ட் என அழைக்கப்படும் பட்ரூள் ஹிஷாம்
ஷாஹ்ரின் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காகச் சேகுபார்ட்டை தாங்கள் நேற்றிரவு ஜாலான் ராஜா
லாவுட்டில் கைது செய்ததாகப் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை
இயக்குநர் டத்தோஸ்ரீ சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
மலேசிய- இந்தோனேசிய எல்லை பிரச்சனை, தலைவர் ஒருவருக்குச்
சொந்தமான சொத்து விபரங்கள் மற்றும் அரசாங்கத் துறைக்குச்
சொந்தமான இரகசிய ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டது
தொடர்பில் சேகுபார்ட்டிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் ஆறு புகார்களைப் பெற்றுள்ள
வேளையில் இந்த வழக்கு தொடர்பில் ஐந்து விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ளன என்று சுஹைலி சொன்னார்.
இந்த வழக்கு தொடர்பில் காவல் நிலையம் வந்து வாக்குமூலம் தரும்படி
சேகுபார்ட்டிடம் போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அவர்
விசாரணைக்கு வரவில்லை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 111வது
பிரிவின் கீழ் போலீசார் அவருக்கு எதிராக நோட்டிசும் வெளியிட்டிருந்தனர்
என்று அவர் தெரிவித்தார்.
அந்த நோட்டிசை சேகுபார்ட் கையெழுத்திட்டுப் பெற்றுள்ளார். எனினும்
எநதவொரு காரணமும் கூறாமல் காவல் நிலையம் வந்து வாக்குலம்
வழங்க அவர் தவறி விட்டார் என நேற்று இங்குள்ள டாங் வாங்கி
போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுஹைலி
குறிப்பிட்டார்.
விசாரணைக்கு உதவும் வகையில் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கத்
தவறுவது நாட்டின் சட்டத்திற்கும் காவல் துறைக்கும் சவால் விடுவதற்கு
ஒப்பதானதாகும் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் சேகுபார்ட்
நேற்று விடியற்காலை 2.15 மணியளவில் விடுவிக்கப்பட்டதாகப் பெரித்தா
ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.








