NATIONAL

தகவல் அறியும் சட்டத்திற்கு அரசு கொள்கையளவில் ஒப்புதல்

15 செப்டெம்பர் 2023, 2:43 AM
தகவல் அறியும் சட்டத்திற்கு அரசு கொள்கையளவில் ஒப்புதல்

கோலாலம்பூர், செப் 15 - தகவல் அறியும் சட்டத்தை இயற்றுவதற்கு தேசிய நல்லாட்சிக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது.

பொதுத் துறைகள் மற்றும் அரசாங்கத்தின் தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதற்கான தெளிவான அளவீடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வரைவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என தமது  தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சிறப்பு அமைச்சரவைக் குழுவின் தேசிய நல்லாட்சிக்கான சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் அடங்கும் என்று  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான நிர்வாகம், உயர்நெறி மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆய்வு மாநாட்டின் இரண்டு அமர்வுகளின் போது நிறைவேற்றப்பட்ட  18 தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டன என்று அவர் சொன்னார்.

சிறப்பான நிர்வாக முறை, உயர் நெறி, ஊழல் தடுப்பு ஆகியவை தொடர்பான சட்ட மற்றும்

கொள்கை ரீதியான அம்சங்களை மேம்படுத்துவதற்கான தீர்மானங்கள் அந்த பரிந்துரையில் இடம் பெற்றிருந்தன.

நாகரீக மலேசியாவை உருவாக்கும் நோக்கத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் மற்றும் நல்லாட்சி அதிகாரமளிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இதற்கிடையில், தகவல் அறியும் சட்டம் தொடர்பான கூட்டத்தின் முடிவின்படி, 1971 ஆம் ஆண்டு அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு சேவை வழங்குவதை மேம்படுத்தவும் தேசியக் கொள்கை உருவாக்கத்தில் மக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.