கோலாலம்பூர், செப் 14 – பொது
வசதிகளுக்கான கோரிக்கை அதிகரித்து வரும்
நிலையில், தனது தொகுதியில் முக்கியமான
உள்கட்டமைப்பு திட்டங்களை
அமல்படுத்துவதை விரைவுபடுத்துமாறு
அரசாங்கத்திற்கு கிள்ளான் நாடாளுமன்ற
உறுப்பினர் வி.கணபதிராவ் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
ஏறக்குறைய அரை மில்லியன்
குடியிருப்பாளர்கள் மற்றும் 210,000
வாக்காளர்கள் என அடர்த்தியான
மக்கள்தொகை கொண்ட கிள்ளான்
தொகுதியில் அவசர மற்றும் தனித்துவமான
பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு
தேவைப்படுவதாக ஜசெக பிரதிநிதியுமான
அவர் சொன்னார்.
கப்பார் மருத்துவமனை, கோத்தா கெமுனிங்
மற்றும் புக்கிட் ராஜாவில் பல பள்ளிகளின்
நிர்மாணிப்புக்கு மத்திய அரசின் ஒப்புதல்
வழங்கிய போதிலும் இன்னும் கட்டுமானப்
பணிகள் தொடங்கப்படவில்லை என்று
கணபதிராவ் தெரிவித்தார்.
கப்பார் மருத்துவமனை 2026 ஆம்
ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அந்த நிலத்தில் எந்த
முன்னேற்றமும் இல்லை என்று அவர்
இன்று நாடாளுமன்றத்தில் 12வது மலேசியத்
திட்டத்தின் இடைக்கால மதிப்பாய்வு மீதான
விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில்
குறிப்பிட்டார்.
கிள்ளான் பகுதியில் புதிய பள்ளிகளை
நிறுவுவதிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
இதில் கவலைக்குரிய விஷயம்
என்னவென்றால் கோத்தா கெமுனிங் 2
இடைநிலைப் பள்ளி மற்றும் புக்கிட்
ராஜாவில் உள்ள மற்ற பள்ளிகளின்
கட்டுமானங்களும் இன்னும்
தொடங்கப்படவில்லை என்பதுதான்.
இதேபோல், கிள்ளானில் பல்வேறு வெள்ளத்
தடுப்புத் திட்டங்கள் இன்னும் பெரிய
முன்னேற்றத்தைக் காணவில்லை என்று
கணபதிராவ் குறிப்பிட்டார்.
12வது மலேசியத் திட்டத்தின் கீழ் நாடு
முழுவதும் வெள்ளத் தடுப்புத்
திட்டங்களுக்காக சுமார் 2,200 கோடி
வெள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் ஒதுக்கியுள்ளார். சிலாங்கூருக்கு
மட்டும் அதில் 100 கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் திட்ட
அமலாக்கத்தில் எந்த குறிப்பிடத்தக்க
முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்
சொன்னார்.
அதே சமயம், கிள்ளான் தெங்கு அம்புவான்
ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்
பிரிவில் நிலவிய கூட்ட நெரிசலைக்
குறைத்ததற்காக அரசாங்கத்தை, குறிப்பாக
சீர்திருத்தத்திற்கான சிறப்புப் பணிப் படையை
(ஸ்டார்) தாம் பாராட்டுவதாக கணபதிராவ்
கூறினார்








