வாஷிங்டன், செப் 14- வரும் 2024 அதிபர் தேர்தலில் தாம் வெற்றி
பெற்றால் ஐந்து அரசுத் துறைகளை மூடுவதன் மூலம் அமெரிக்க கூட்டரசு
அரசின் அளவைக் குறைக்கவுள்ளதாக குடியரசுக் கட்சியின் அதிபர்
வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கூறுகிறார்.
எனது முதல் தவணையின் இறுதியில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை
75 விழுக்காடு குறைக்கப்படும் என்று அவர் கூறியதாக ஸ்புட்னிக் செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூடப்படும் அரசுத் துறைகளில் மத்திய புலனாய்வு மையம் (எஃப்.பி.ஐ.),
மது, புகையிலை, சுடும் ஆயுதங்கள், மருந்துகள் மையம் (ஏ.டி.எஃப்.)
கல்வித் துறை, அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் வேளாண்
உணவு மற்றும் ஊட்டச்சத்து சேவை துறை ஆகியவையும் அடங்கும்
என்று அவர் சொன்னார்.
இந்த அரசு துறைகளை மூடுவதற்கு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து
தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக விவேக்
குறிப்பிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்ற சோதனைகளில் தோல்வி கண்ட குறைந்தது 50
விழுக்காட்டு கூட்டரசு ஒழுங்கு முறைகளை மறுஆய்வு செய்யவும் தனது
நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
அந்த துறைகளுக்கு மாற்றாக வேறு அமைப்பு அமைக்கப்படாது. அதிலுள்ள
ஊழியர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றார் அவர்.
உதாரணத்திற்கு எஃப்.பி.ஐ.யில் உள்ள 35,000 பணியாளர்களில் 15,000 பேர்
அமெரிக்க மார்ஷெல் சேவை, நிதிக் குற்ற அமலாக்க வலையமைப்பு
மற்றும் மருந்து அமலாக்க நிர்வாகம் ஆகிய துறைகளில் சேர்க்கப்படுவர்
என்றும் அவர் சொன்னார்.


