சைபர்ஜெயா, செப் 14- சாலை விபத்துகளில் தினமும் சராசரி ஒரு சிறார்
மரணமடைவது 2011 முதல் 2020 வரைலான தரவுகள் வழி தெரிய
வந்துள்ளதாக துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி
ஹபிபுல்லா கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துகளில் மரணமடைந்த 15
வயதுக்கும் குறைவான சிறார்களின் எண்ணிக்கை 7.25 விழுக்காடாக
இருந்தது அரச மலேசிய போலீஸ் படையிடமிருந்து பெறப்பட்டத்
தகவல்கள் மீது மிரோஸ் எனப்படும் மலேசிய சாலை பாதுகாப்பு
ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று
அவர் சொன்னார்.
இதனைத் கருத்தில் கொண்டு சாலை விபத்துகளில் சிறார்கள்
உயிரிழக்கும் அல்லது காயமடையும் சம்பவங்களைக்
கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணர்வு இயக்கங்கள், சாலை பாதுகாப்புக்
கல்வி உள்பட பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சு
மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
சாலை பாதுகாப்புக் கல்வி ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில்
மலாய் பாடத்தின் ஒரு பகுதியாக விளங்குவதை சுட்டிக் காட்டிய அவர்,
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்த பாடம் பாலர் பள்ளிகளுக்கும்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த பாடத் திட்டத்தில் சாலை போக்குவரத்து சமிக்ஞைகளை அறிந்து
கொள்வது, சாலை அடிப்படை வசதிகள் மற்றும் வாகன மாதிரிகளை
அறிந்து கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்றார்
அவர்.
சாலை பாதுகாப்பை ஒரு கலாசாரமாக்குவதற்கு ஏதுவாக நமது
பிள்ளைகளுக்கு இளம் பிராயம் தொடங்கி சாலை பாதுகாப்பின்
அவசியத்தை வலியுறுத்தி வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்
கொண்டார்.








