கோலாலம்பூர், செப் 14 - நாட்டின் தலைநகர்
கோலாலம்பூரை சிலாங்கூருடன் மீண்டும்
ஒருங்கிணைக்க வேண்டும் என்ற
அதிரடியானப் பரிந்துரையை பெட்டாலிங்
ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியேன்
சுங் முன் வைத்துள்ளார்.
சிறந்த பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும்
வளர்ச்சிக்கு இந்த பரிந்துரை வழி வகுக்கும்
என்பதோடு .
'மெகா கே.எல். பெருநகரத்தை'
உருவாக்குவதையும் இது மையமாகக்
கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக சிலாங்கூர்
மற்றும் கோலாலம்பூர் மிகப்பெரிய
வளர்ச்சியைக் கண்டாலும் சமீப காலங்களில்
அந்த வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது. இதைக்
கருத்தில் கொண்டு திட்டமிடல் மற்றும்
செயலாக்கத்தில் பிரதிரூப மாற்றம் தேவை
என்றார் அவர்.
கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு விரிவான பொது
போக்குவரத்து திட்டமிடல் தேவை. மேலும்,
கூடுதல் மலிவு வீடுகளின் நிர்மாணிப்புக்கு
நிலமும் தேவை. பேங்காக், ஜகார்த்தா மற்றும் ஹோ
சி மின் போன்ற நகரங்களுடன் போட்டியிடும்
ஆற்றலை கொண்ட நகர திட்டமிடல் நமக்கு
மிகவும் அவசியமாகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த தொலைநோக்கு மற்றும் எதிர்பார்ப்பை
மனதில் கொண்டு கோலாலம்பூரை
சிலாங்கூரிடம் திருப்பி கொடுப்பதன் மூலம்
ஒரு பெருநகரத்தை உருவாக்க நான்
முன்மொழிகிறேன். இதன் மூலம் ஒரு
நிலையான மெகா கே.எல்.பெருநகரம்
உருவாக்கப்படும் என்றார் அவர்.
அத்தகைய ஒருங்கிணைப்பு வளர்ச்சித்
திறனை மேம்படுத்தும். பொதுப்
போக்குவரத்தை சிறப்பாக ஒழுங்குபடுத்தவும்
முடியும். மேலும் சிலாங்கூர் மாநிலம் அதன்
விரிவான நில வங்கி மூலம் மலிவு விலை வீட்டுடைமைத் திட்டங்களுக்கு
அடித்தளத்தை அமைக்கவும் முடியும் என்று லீ கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 12வது மலேசியத்
திட்டத்தின் மத்தியகால மதிப்பாய்வு மீதான
விவாதத்தின் போது அவர் இவ்வாறு
கூறினார்.
இத்தகைய இணைப்பு தென்கிழக்கு
ஆசியாவின் முக்கிய மையமாகக் கிள்ளான்
பள்ளத்தாக்கை நிலைநிறுத்தும் என்பதோடு
மற்ற மெகா பெருநகரங்களுக்குப் போட்டியாக
விளங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த யோசனை தீவிரப் போக்குடையதாகத்
தோன்றலாம். ஆனால், கோலாலம்பூர் ஒரு
காலத்தில் சிலாங்கூரின் ஒரு பகுதியாக
இருந்தது என்பதை நினைவில் கொள்வது
அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.




