கோலாலம்பூர், செப் 13- கிள்ளானில் உள்ள கேரித் தீவில் சரக்கு
துறைமுகத்தை அமைக்கும் திட்டம் துறைமுகத் துறையில் மலேசியாவை
உலக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாற்ற உதவும் என்று மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அனைத்து முக்கியத் சேவைத் துறைகளும் விரிவாக்கம் காண்பதற்கு இந்த
துறைமுகத் திட்டம் வழி வகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகவே, இந்த திட்டம் வெற்றிகரமாக அமலாக்கம் செய்யப்படுவதற்கு
ஏதுவாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி
இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கேரித் தீவு துறைமுகம், நோர்த்போர்ட் துறைமுகம் மற்றும்
வெஸ்ட்போர்ட் துறைமுகம் ஆகியவை சதுரஅடி ரீதியாக சிங்கப்பூரின்
பரப்பளவை அளவை எட்டும் என்று மக்களவையில் இன்று 12வது
மலேசியத் திட்ட மத்திய கால மதிப்பாய்வு மீதான விவாதத்தில் கலந்து
கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
இந்த மூன்று துறைமுகங்கள் மூலம் நமது துறைமுகத் தொழில்
துறையின் ஆற்றல் அதிகரித்து இத்துறையில் உலக முக்கியத்துவம்
வாய்ந்த நாடாக மாறுவதற்குரிய வாய்ப்பினை நாட்டிற்கு ஏற்படுத்தும்
என்றார் அவர்.
கேரித் தீவு துறைமுகத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கொண்டுள்ள
கடப்பாடு மற்றும் ஈடுபாட்டிற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக
கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய தவணைக்கான
மதிப்பாய்வை மக்களவையில் நேற்று தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம், அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் சரக்கு
விநியோகம் தொடர்பான முக்கிய முன்னெடுப்புகளில் கேரித் தீவு சரக்கு
துறைமுகத்தை மேம்படுத்துவதும் ஒன்றாகும் என்று கூறினார்.








