கோலாலம்பூர், செப் 12 – பெரிக்கத்தான்
நேஷனல் ஆட்சியின் போது 12வது மலேசியத்
திட்டத்தின் (2021-2025) முதல் இரண்டு
ஆண்டுகள் தோல்வியடைந்து விட்டதாக
முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ
டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
அந்த திட்டத்தின் நோக்கங்களில் 31
சதவிகிதம் எட்டப்பட்ட போதிலும் கசிவுகள்
மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக
நாட்டின் தேசியக் கடன் 1.5 டிரில்லியன்
வெள்ளியாக உயர்வு கண்டது என கோல சிலாங்கூர் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் தெரிவித்தார் .
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில்
டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பிரதமராக
இருந்த காலத்தில் சுமார் 50,000 கோடி
வெள்ளி கூடுதலாகப் பெறப்பட்டதை அவர்
சுட்டிக்காட்டினார்.
12வது மலேசியத் திட்டத்தின் எஞ்சிய
காலப்பகுதியில் நாம் வெற்றியை
உறுதிசெய்ய விரும்பினால் இந்த கடன்
பிரச்சனையில் நாம் கவனம் செலுத்த
வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில்
12வது மலேசியத் திட்ட மத்திய கால
மதிப்பாய்வு மீதான விவாதத்தில் கலந்து
கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
12வது மலேசியத் திட்டத்தின் முதல் இரண்டு
ஆண்டுகளில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். அதிக கடன் காரணமாக வளர்ச்சியை இயக்க முடியாத ஒரு நிதி இடத்தில் நிற்கிறோம் என்றார் அவர்.
கடன் அதிகரிப்புக்கு வழிவகுத்த நிதிக்
கசிவுகளைக் கருத்தில் கொண்டு தேசிய நிதி
எதிர்ப்புக் குற்றவியல் மையத்தின்
செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய
அவசரத் தேவை நமக்கு உள்ளது என்று அவர்
மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் அதிக வருமானம்
ஈட்டும் நாடாக உருவாகும் இலக்கை
அடைவதற்கான தற்போதைய அரசாங்கத்தின்
திட்டம் முந்தைய நிர்வாகங்களைப் போல்
வெறும் உதட்டளவில் இருக்காது என்று தாம்
நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.








