சுங்கை பட்டாணி, செப் 12- தாமான் கெம்பாசிலுள்ள உணவகம் ஒன்றின்
அருகிலுள்ள பயன்படுத்தப்படாத குளத்தில் 78 வயது முதியவரும் ஒரு
வயது ஏழு மாதம் நிரம்பிய அவரின் பேரனும் மூழ்கி இறந்தனர்.
அஸ்மி அப்துல்லா மற்றும் அவரின் பேரனான ஜியாப் மிக்காயில் முகமது
யுஸாரித் ஆகிய இருவரின் உடல்களும் நேற்று இரவு 7.20 மணியளவில்
கண்டு பிடிக்கப்பட்டன. அவ்விருவரின் உடல்களும் குளத்தில் மிதப்பதைக்
கண்ட பொது மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து திக்காம்
பத்து போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த குழு ஒன்று சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைடி சே
ஹசான் கூறினார்.
பினாங் துங்கால், கம்போங் மாத்தாங் பெராங்கான் கிராமத்தைச் சேர்ந்த
அவ்விருவரின் உடல்களும் பொது மக்களின் உதவியுடன் அந்த
குளத்திலிருந்து மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தன் தந்தை பேரனுடன் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் அந்த
வழியாக பொழுது போக்காக நடந்து செல்வது வழக்கம் என்றும் எனினும்,
நேற்று இரவு 7.00 மணி வரை அவ்விருவரும் வீடு திரும்பாததைக் கண்டு
தாம் கலக்கமுற்றதாக அம்முதியவரின் மகன் தங்களின் தெரிவித்தார்
என்று ஜைடின சொன்னார்.
தந்தையையும் மகனையும் தேடி அந்த ஆடவர் அக்குளத்திற்குச் சென்ற
போது அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர் இருவரின் உடல்கள் குளத்தில்
மிதப்பதாகக் கூறியுள்ளனர் என்றார் அவர்.
இந்த சம்பவத்தில் சூது நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியம் இல்லை எனக்
கூறிய அவர், அவ்விருவரின் உடல்களும் பரிசோதனைக்காக சுல்தான்
அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என
அவர் மேலும் தெரிவித்தார்.


