அலோர்ஸ்டார், செப் 12- லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பில்
அமலாக்கத் துறைகளைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகளை ஊழல் தடுப்பு
ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. கடந்த 2018 முதல் 2021 வரை
மீன்படி படகு உரிமையாளர்கள் மற்றும் ரன்னர் எனப்படும் இடைத்
தரகர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது தொடர்பில் இந்த
கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நடவடிக்கை
எடுக்கப்படாமல் இருப்பதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்து அந்த
அமலாக்க அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது என்று
எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் கூறின.
கோல கெடா, பத்து உபான் மற்றும் லங்காவியில் பணி புரிந்து வரும்
அந்த ஒன்பது அமலாக்க அதிகாரிகளுக்கும் வெ.300 முதல் வெ.7,000 வரை
லஞ்சத் தொகையை வழங்கியதன் பேரில் பொது மக்களில் இருவரும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்பது முதல் 50 வயது வரையிலான அந்த 11 பேரும் நேற்று காலை
10.00 மணியளவில் கைது செய்யப்பட்டனர். வாக்குமூலம் பதிவு
செய்யப்படுவதற்காக அலோர்ஸ்டாரில் உள்ள எம்.ஏ.சி.சி.
தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அவர்களை அதிகாரிகள்
விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.
இதனிடையே, அந்த அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை
உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. உளவுப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மி
கமாருஸமான், 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ்
அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
அந்த அமலாக்க அதிகாரிகளில் ஐவரை விசாரணைக்காக தடுத்து
வைப்பதற்கான நீதிமன்றம் ஆணை இன்று பெறப்படும் என்றும்
மற்றவர்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன் எம்.ஏ.சி.சி. ஜாமீனில்
விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


